ஐடி துறையில் மீண்டும் ‘பணிநீக்கப் புயல்’...! ஒரே நாளில் 8,000 ஊழியர்களை தூக்கிய மெட்டா...! - கண்ணீரில் ஊழியர்கள்...!
Another layoff storm IT sector Meta laid off 8000 employees single day Employees tears
மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு நேற்று காலை வந்த ஒரு எளிய அறிவிப்பு, பின்னர் உலக தகவல் தொழில்நுட்ப துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “இன்று அனைவரும் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றுங்கள்” என்ற உத்தரவை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு மெட்டா நிறுவனம் அனுப்பியிருந்தது.இதன் காரணமாக வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் மெட்டா அலுவலக வளாகங்கள் வெறிச்சோடிய காட்சியை உருவாக்கின.

அலுவலக அறைகளில் பணிச்சூழல் அமைதியாக காணப்பட்டதுடன், வளாகங்களில் ஊழியர்களின் இயல்பான நடமாட்டமும் முற்றிலும் குறைந்திருந்தது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஊழியர்களின் மின்னஞ்சல் பெட்டிகளில் அதிர்ச்சித் தகவல்கள் வரிசையாக வந்து சேர்ந்தன. மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை, அதாவது சுமார் 8 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த பணிநீக்க அறிவிப்பின் முதல் கட்ட தகவல் சிங்கப்பூரில் உள்ள நிறுவன மையத்திலிருந்து வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் நேர வித்தியாசங்களுக்கு ஏற்ப, அடுத்தடுத்த கட்டங்களாக இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.முதலில் “வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்” என்ற அறிவிப்பை வழங்கி, அதன்பிறகு பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்ட மெட்டாவின் இந்த அணுகுமுறை, தகவல் தொழில்நுட்ப உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்களின் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலம் வரை சுமார் 78 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்த மெட்டா நிறுவனத்தில், தற்போது ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதோடு, மேலும் பலர் புதிய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் மனிதவளத் துறை முதன்மை அதிகாரி ஜானெல்லே கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய குழுக்களுக்கு மாற்றப்படுவார்கள். காலியாக இருந்த 6 ஆயிரம் பணியிடங்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நிறுவனத்தின் மேலாண்மை அடுக்குகளை குறைத்து, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் விரைவாக செயல்படும் எளிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் அவர் விளக்கியுள்ளார்.
English Summary
Another layoff storm IT sector Meta laid off 8000 employees single day Employees tears