இலங்கை நீர்கொழும்பு சிறையில் வன்முறை; 07 சிறைச்சாலை அதிகாரிகள் உள்பட 19 கைதிகள் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்..!
26 killed in Sri Lankan prison riot
இலங்கை- நீர்கொழும்புச் சிறைச்சாலையில் இன்று முற்பகல் ஏற்பட்ட மோதல் நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அன்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.
பின்னர் இது கலவரமாக மாறிய நிலையில், இரு கைதிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்றும் மோதல் வெடித்தது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், சிறைச்சாலையில் அமைதியை பேணுவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, 10 காவல்துறை குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், காவல்துறையினர் விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தினரும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த மோதலில் படுகாயமடைந்த 18 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா, இராகம மற்றும் வெலிசர ஆகிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, 04 சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முழு பொறுப்பையும் தாம் ஏற்றுக் கொள்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனுதாபங்களையும் தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளதோடு, எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த துயர சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதல் சம்பவம் ஏன்?, யாரால், என்ன நோக்கத்திற்காக நடந்தது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த மோதல் நிலையை வழிநடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை நாளைய தினத்துக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
26 killed in Sri Lankan prison riot