''எனது அட்வைஸை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை. பக்கத்து கட்சியிலா கேட்கப் போகின்றனர்?'' எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்..!
MP Karti Chidambaram says no one in my party listens to his advice
''தனது அட்வைஸை என்னுடைய கட்சியில் யாரும் கேட்பதில்லை. பக்கத்து கட்சியிலா கேட்கப் போகின்றனர்?'' என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;
புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், ஆட்சி அமைந்து குறுகிய காலத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெரும்பாலான அமைச்சர்கள் முதல் முறையாக பொறுப்பேற்றிருப்பதால் நிர்வாகத்தில் நிலைபெற அவகாசம் தேவை என்றும், முதல் பட்ஜெட்டுக்குப் பிறகு அரசின் செயல் திட்டம் குறித்து முழுமையாக மதிப்பிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அதன் பயன் பொது மக்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விலையை குறைக்க தொடங்கிய நிலையில், அரசு நிறுவனங்களும் அதனை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''ஐந்து ஆண்டுகளில் தவெக ஆட்சி கலையாது. ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். யாரும் விட்டு போகப்போவதில்லை. வெளியில் இருப்பவர்கள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் வெற்றியடையாது'' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அத்துடன், திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு தேசிய அரசியல் தெரியவில்லை எனவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், 03 மாநிலங்களில் முதல்வர் இருக்கின்றனர். உங்களுக்கு எத்தனை முதல்வர் இருக்கின்றனர்? என்று கேள்வி எழுப்பியதோடு, சினிமா பஞ்ச் டயலாக்கில் அரசியல் பண்ணலாம் என நினைக்கின்றனர். அவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேசவேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

அதேப்போன்று, நமது நீர் தேவைகளை எந்த அளவிலும் பாதிக்காத அளவிற்குதான் நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும், அதற்குதான் காவேரி மேலாண்மை இருக்கிறது. தமிழ்நாட்டில் நீர் பிரச்சினை பொறுத்தவரைக்கும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பற்றி ஆளுநரிடம் கொடுத்த புகார் என்பது தேவையில்லாத சர்ச்சை எனவும், ஆளுநருக்கு வைகை ஆற்றை பற்றி ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது என்றும், பாஜக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும், அவர்களுடைய அரசியல் சாசனத்துக்கு, அதிகாரத்துக்கு மேலே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2031-இல் தான் நடக்கும் என்றும், யாராக இருந்தாலும் பழகிய பிறகுதான் அனுபவம் கிடைக்கும். பட்ஜெட்டுக்குப் பிறகு விமர்சனம் வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தி படித்தேன். அதுபற்றி தெரியாது என்றும், காங்கிரஸ் சார்பில், கொடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தற்போது வரை நியமனம் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ராமர் கோயிலில் நிறைய ஊழல் நடந்துள்ளது. ஆனால், பாஜக வாய் திறக்க மறுக்கிறது. கோயில் நிர்வாகத்தை தனியார் கையில் கொடுக்க நினைக்கின்றனர். அது பற்றியும் யாரும் பேச மறுக்கின்றனர். தனியார் மயமானால் இந்து அறநிலையத் துறை அடைத்துவிடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் சிலர் விலகி வருகின்றனர். நீண்ட நாள் நீடிக்கக் கூடிய தலைவராக தற்போது விஜய் இருக்கும் சூழலில் அவர்கள் வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிமுக கட்சி இருக்கவேண்டும். அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரியும் கட்சியான அதிமுக அழிவது எனக்கு சரியாகப்படவில்லை. ஜனநாயகத்துக்கும் சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், என்னைக் கேட்டால் யாரையும் தவெக சேர்த்து கொள்ள வேண்டாம் என்றும், யாரையும் அனுப்ப வேண்டாம். பெரும்பான்மை இருக்கிறது. எனது அட்வைஸை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை. பக்கத்து கட்சியிலா கேட்கப் போகின்றனர்? என்று கூறியுள்ளார்.
மேலும், ராஜினாமா செய்து தவெகவுக்கு வருபவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த தொகுதி வாக்காளர்கள் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும், எதற்காக ராஜினாமா செய்கிறார்கள் என சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, காங்கிரஸ் புதிய தலைவருக்கு வாழ்த்துகள் என்று செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
English Summary
MP Karti Chidambaram says no one in my party listens to his advice