''பக்திக்கு வயது ஒரு தடைக்கல்லே அல்ல''; 116 வயதில் 3,500 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த சென்னையை சேர்ந்த பாட்டி; விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்த ஆந்திர முதல்வர்..! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக அலிபிரி மலைப்பாதை வழியாக 3,500 படிகள் ஏறி தனது 116 வயதில் சென்னையை சேர்ந்தவர் நவநீதம்மாள் என்பவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

ஆந்திர முதல்வரின் உத்தரவின்பேரில், திருப்பதி தேவஸ்தானம் அந்த மூதாட்டிக்கு விஐபி தரிசனம் ஏற்பாடு செய்து கௌரவித்துள்ளது. ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட இவர் தன்னை ஏழுமலையானை தரிசிக்க அழைத்து செல்லுமாறு தனது பேரனிடம் கேட்டுக்கொண்டார். 

அதுவும், திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தி தான் ஏழுமலையானை தரிசிப்பேன் என்றும் பிடிவாதம் பிடித்துள்ளார்.

நவநீதம்மாவின் பேச்சை தட்டமுடியாமல்,அவரது பேரன் திக்பதி மற்றும் அவரது குடும்பத்தார் திருப்பதிக்கு புறப்பட்டுள்ளனர். கடந்த 02 நாட்களுக்கு முன்னர் அவர்கள் அலிபிரி மலைப்பாதை வழியாக மூதாட்டி நவநீதம்மாவுடன் மெல்ல நடக்க ஆரம்பித்தனர். தள்ளாத வயதிலும் அவர் கைத்தாங்கலாக படிக்கட்டுகளில் நடந்து செல்வது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதனை பார்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வலைதளத்தில், ''பக்திக்கு வயது ஒரு தடைக்கல்லே அல்ல. ஏழுமலையான் மீது 116 வயது பக்தை கொண்டுள்ள நம்பிக்கையே இதற்கு சான்று'' என குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், மூதாட்டிக்கு சிறப்பான தரிசன ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென சந்திரபாபு நாயுடு தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவும் தனது சமூக வலைத்தளம் மூலம் அந்த மூதாட்டியை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து விஐபி பிரேக் தரிசனம் செய்து தர வேண்டுமென்றும், அவரது வாழ்நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் அவர் பயோ மெட்ரிக் வழியாக (பணியில் உள்ள தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் செல்லும் வழி) செல்லலாம் எனவும் அனுமதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து தேவஸ்தான ஊழியர்கள் இன்று திருமலையில் 116 வயது மூதாட்டியை தேடி கண்டு பிடித்தனர். அதன் பின்னர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக அவரையும், அவருடன் வந்த அவரது குடும்பத்தார் அனைவரையும் அதே விஐபி பிரேக் தரிசனம் வழியாக தரிசனத்திற்கு அழைத்து சென்று கௌரவித்துள்ளனர்.

அதன் பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், மூதாட்டி நவநீதம்மாவிற்கு, தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதி, பட்டு வஸ்திரத்தை போர்த்தி, வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

அத்துடன், தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா, மூதாட்டிக்கு தீர்த்த, பிரசாதங்கள், சுவாமியின் திருவுருவப்படம் மற்றும் லட்டு, வடை பிரசாதங்களை வழங்கி, அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதோடு, அவரை பத்திரமாக தேவஸ்தான ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மூதாட்டியின் பேரன் திக்பதி நெகிழ்ச்சியாக பேசுகையில், ''பாட்டிக்கு ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் எனும் தீவிர ஆர்வம் இருந்தது. அதுவும் நடந்தே மலையேறி சென்று தரிசிக்க வேண்டும் என சொல்லி விட்டார். நாங்கள் மெல்ல அவரை அலிபிரி மலைப்பாதை வழியாக நடத்தி அழைத்து சென்றோம். யாரோ புண்ணியவான் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு, எங்கள் பாட்டியை பலர் பாராட்டி வந்தனர். இதற்குள் இது வைரல் ஆகி, அது முதல்வர் சந்திரபாபு நாயுடு வரை எட்டி, அவர் வாயிலாக திருப்பதி தேவஸ்தானத்தினர் எங்களை தேடி கண்டு பிடித்து மிக அருமையான தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். எங்கள் வாழ்நாளில் இதனை மறக்க மாட்டோம். உதவி செய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என மனம் உருகி நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 116 year old grandmother from Chennai climbed 3500 steps to see the Tirupati Tirumala


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->