இடி, மின்னல்... பலத்த காற்றுடன் மழை...! தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...!
Thunder lightning strong winds rain Weather department warns heavy rain many districts Tamil Nadu
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஏனைய தமிழக பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த சில நாட்களிலும் மழை தொடரும்
28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
31-ந்தேதி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வட உள் தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு
வரும் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருப்பினும் வட உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.
சென்னையில் மாலை, இரவில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
27 மற்றும் 28-ந்தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.
29-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் வங்கக்கடலின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல், 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Thunder lightning strong winds rain Weather department warns heavy rain many districts Tamil Nadu