சுட்டெரிக்க வரும் கத்தரி வெயில்...! வானிலை ஆய்வாளரின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்...! - கோடை மழைக்கு வாய்ப்பு உண்டா...?
scorching heat coming latest report from meteorologist there chance summer rain
தமிழ்நாட்டில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே வெயில் தீவிரம் அடைந்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் வேலூரில் வெப்பநிலை 108 டிகிரியை எட்டியதாக பதிவானது. இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் 105 டிகிரியை மீறியும், சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் வெப்பம் கடும் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், கோடையின் உச்ச கட்டமாக கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலப்பகுதியில் வெயில் கடும் தீவிரத்துடன் தாக்கம் செலுத்தும். பகலில் சுடர்க்கதிர்கள் கொதித்தெழ, இரவிலும் உஷ்ணம் குறையாமல் சூடான சூழல் நிலவும்.

சில இடங்களில் பகல் வெப்பம் 110 டிகிரி வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள கத்தரி வெயில் இந்த ஆண்டு எவ்வாறு அமையும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்தார்.
அவரின் தகவல்படி, முதல் இரண்டு வாரங்களில் கடல் சார்ந்த அலைச்சல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அதிகரிக்க இருக்கின்றன. அதே நேரத்தில், வெப்பமண்டல காற்று குவிதல் வடக்கு நோக்கி நகரும். இதன் விளைவாக, இந்த ஆண்டு கத்தரி வெயில் காலம் வெப்பத்துடன் சேர்ந்து கோடை மழையும் இணைந்த கலவையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வழக்கத்தை விட அதிக அளவில் கோடை மழை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இதனுடன், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே, வருகிற 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழைக்கு முன்பாகவே மழைப்பொழிவு உருவாகும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காற்றுச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதிகள், மேலும் புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழையை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.மேலும், இம்மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது வாரத்தில் பருவமழை தொடங்கிய பின், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய இடங்களில் மழை மேலும் வலுப்பெறக்கூடும்.மொத்தத்தில், கத்தரி வெயில் காலமாக இருந்தாலும், கோடை மழை ஆதரவாக அமைவது தற்போதைய நிலவரம் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் வெப்பம் நீடித்தாலும், மழை அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
scorching heat coming latest report from meteorologist there chance summer rain