தீபாவளிக்குப் பின் வானம் பொழியுது! -இன்று இரவு 7 மணி வரை மழை எச்சரிக்கை...!
Rainy weather after Diwali Rain warning until 7 pm tonight
தென்கிழக்கு அரபிக்கடலில் வானிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு சுற்றுவட்டாரத்தில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மேலும் வலுவடைந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதோடு, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை மாற்றங்களின் விளைவாக, இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முக்கியமாக, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், இன்று இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர், கடலூர், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மொத்தம் 33 மாவட்டங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Rainy weather after Diwali Rain warning until 7 pm tonight