ஆரஞ்ச் அலெர்ட்! தமிழகம் கடலோரம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை...பலத்த காற்று...!
Orange alert Heavy rain and strong winds expected today coastal areas Tamil Nadu and Puducherry
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது இலங்கை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு, சென்னைக்கு தெற்கு–தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன், மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் பயணிக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு, இன்று மாலை வடக்கு இலங்கையில் திரிகோணமலை – யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தெற்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று அவ்வப்போது வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Orange alert Heavy rain and strong winds expected today coastal areas Tamil Nadu and Puducherry