‘மோன்தா’ புயல் எதிரொலி: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
IMD cyclonic storm Tamilnadu heavy rain alert
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு 11.30 மணியளவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களிலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான இந்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுவடைந்தது. இது தற்போது அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 600 கி.மீ தொலைவில், மேலும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் நிலைகொண்டுள்ளது. புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (அக். 28) ஆந்திரக் கடலோரப் பகுதியில் மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் தாக்கத்தால் திங்கள்கிழமை (அக். 27) முதல் நவம்பர் 2 வரை வட தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திலும் மிக பலத்த மழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடலில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
English Summary
IMD cyclonic storm Tamilnadu heavy rain alert