ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு இது நல்ல பாடம்... பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
Australia cricket paler harrasement case BJP Minister
இந்தூரில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு கஃபே ஒன்றுக்கு வெளியே சென்றபோது இவர்கள் மீது இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புகார் அடிப்படையில் அந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கை, கால் பகுதிகளில் மாவுக்கட்டுடன் அவர் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்ததுடன், வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து மாநில நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா வெளியிட்ட கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. “இந்த சம்பவம் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஒரு பாடமாக அமையும். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகுந்த ரசிகர்கள் உள்ளதால், அவர்கள் பொதுவெளியில் வரும்போது பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணராமல் சலனமின்றி நடக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
பெண்களை பாதுகாப்பது குறித்து பேசாமல், பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறும் அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் கைலாஷ் விஜய்வர்கியா, “பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை விரும்பவில்லை” என கூறியிருந்தார். அந்த கருத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Australia cricket paler harrasement case BJP Minister