தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் 08 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
Heavy Rain Forecast for 8 Districts in Tamil Nadu
தமிழகத்தில் 08 மாவட்டங்களில் (தேனி, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி) ஓரிரு இடங்களில் மே 18-ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 24 மணி நேர நிலவரப்படி, செங்கல்பட்டு மாவட்டம் நியூ சென்னை டவுன்ஷிப்பில் 05 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 04 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 03 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சனிக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.
இதன் காரணமாக, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 03 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மே 17-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 05 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மே 18, 19, 21, 22 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மே 20-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 18-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 08 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மே 19-ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 04 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததக் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 16, 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்ததாக தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்ககடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, கேரள - கர்நாடகா கடலோரப்பகுதி, லட்சத்தீவுகளில் மே 20-ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Heavy Rain Forecast for 8 Districts in Tamil Nadu