கூகுளின் புதிய பாதுகாப்பு வசதி– உங்கள் அக்கவுண்ட்டை யாராலும் ஹேக் செய்ய முடியாது: புதிய 'Recovery Contacts' வசதி அறிமுகம்!
Google new security feature No one can hack your account New Recovery Contacts feature introduced
ஆன்லைனில் அதிகரித்து வரும் மோசடிகளைத் தடுக்கவும், பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தவும் கூகுள் நிறுவனம் ஒரு பெரிய பாதுகாப்பு மேம்படுத்தலை அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் சேவைகள் முழுவதும் பரவியுள்ள இந்த புதிய அம்சங்கள், பயனர்களின் கணக்கை பாதுகாக்கும் வகையில் முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளன.
இதில் முக்கியமான அம்சமாக “Recovery Contacts” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர் தன் கூகுள் கணக்கிற்கான அணுகலை இழந்தால், நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை மீட்பு தொடர்புகளாக சேர்க்க முடியும். கணக்கு மீட்பின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புக்கு 15 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் குறியீடு அனுப்பப்படும். அந்த குறியீட்டின் மூலம் மட்டுமே கணக்கை மீட்டெடுக்க முடியும். மேலும், ஒருவர் அதிகபட்சம் பத்து பேரை மீட்பு தொடர்புகளாக சேர்க்கலாம். ஒரு தொடர்பு பயன்படுத்தப்பட்ட பிறகு, அதே நபரை மீண்டும் ஏழு நாட்களில் பயன்படுத்த முடியாது. இதன் மூலம் கணக்கு மீட்பு செயல்முறை மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது.
அடுத்து, கூகுள் இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இனி கடவுச்சொல் அல்லது மாற்று மின்னஞ்சல் முகவரியை மட்டும் நம்பாமல், மொபைல் எண்ணை வைத்து உள்நுழையலாம். பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து கூகுள் கணக்குகளையும் பார்க்கவும், தங்கள் சாதனத்தின் ஸ்கிரீன் லாக் அல்லது பேட்டர்ன் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் முடியும். இந்த வசதி தற்போது பல நாடுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மோசடிகளைத் தடுக்க கூகுள் மெசேஜஸ் பயன்பாட்டில் “Safer Links” எனப்படும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தேகத்திற்குரிய லிங்க்குகள் ஒரு எச்சரிக்கைச் சின்னத்துடன் காட்டப்படும். ஃபிஷிங் அல்லது மால்வேர் தளங்களுக்கு இணைப்புகள் செல்லும் போது, பயனர்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கப்படும். பயனர் “பாதுகாப்பானது” என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே அந்த தளத்தைத் திறக்க முடியும். இந்த அம்சம் உலகம் முழுவதும் வரும் குறுஞ்செய்தி மோசடிகளைத் தடுக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட உரையாடல்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, “Key Verifier” என்ற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் நண்பர்களின் சாதனத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து உரையாடல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த முடியும். இதன் மூலம் மூன்றாம் தரப்பு இடைமறிப்பிலிருந்து உரையாடல்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.
இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களில் ஆதரிக்கப்படும். மேலும், ஆன்லைன் மோசடிகளை அடையாளம் காணவும், தவிர்க்கவும் கூகுள் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, இவ்வாறு பயனர்களின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி கூகுள் மேற்கொண்டுள்ள இந்த மாற்றங்கள், டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
Google new security feature No one can hack your account New Recovery Contacts feature introduced