சில்லறை முதல் கோடிகள் வரை....யு.பி.ஐ. ஆதிக்கம்! 10 வருடத்தில் 3,140 மடங்கு உயர்வு...! - மிரள வைக்கும் புள்ளிவிவரம்
From small amounts crores UPI dominates 3140 times increase 10 years Shocking statistics
இந்தியாவின் பணப்பரிவர்த்தனை முறையை அடிப்படையாக மாற்றியமைத்த முன்னோடியான புதுமை தான் ‘யு.பி.ஐ.’ (யுனிபைடு பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்) எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை தளம். வங்கி வசதி குறைந்த கிராமப்புறங்களிலும், சாதாரண செல்போன் மூலமே நிதி சேவைகளை எளிதில் பெறச் செய்யும் நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
2016-17 காலகட்டத்தில் அறிமுகமான இந்த தொழில்நுட்பம், ஆண்டுதோறும் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஆரம்பத்தில் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், 2018-19-ஆம் ஆண்டில் அது ரூ.8.8 லட்சம் கோடியாக பல மடங்கு உயர்ந்தது.

தொடர்ந்து 2019-20-ல் டிஜிட்டல் மாற்றத்தின் வேகம் அதிகரித்து, பரிவர்த்தனை அளவும் கணிசமாக விரிந்தது.இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, 2020-21-ல் பரிவர்த்தனை மதிப்பு ரூ.41 லட்சம் கோடியை எட்டியது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நேரடி பண பரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் முறைகள் பெரிதும் பயன்பட்டதால், யு.பி.ஐ. பயன்பாடு மிகுந்த ஆதரவை பெற்றது.
அந்தகாலகட்டமே இதன் வளர்ச்சியை பலமடங்கு உயர்த்திய திருப்புமுனையாக அமைந்தது.பின்னர் 2022-23-ல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் விரிவடைந்து, நாடு முழுவதும் பரவலான பயன்பாட்டை அடைந்தது. அதன் பின் கூட இந்த வளர்ச்சி தொடர்ச்சியாக உயர்வைத் தக்க வைத்துள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில், ரூ.314 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே ஆண்டில் மட்டும் 24,162 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. தினசரி சராசரியாக சுமார் 60 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுவது இந்த தளத்தின் பரவலான பயன்பாட்டை வெளிப்படுத்துகிறது.
2016-17 முதல் 2025-26 வரை கடந்த பத்து ஆண்டுகளில், யு.பி.ஐ. பயன்பாடு 3,140 மடங்கு உயர்ந்துள்ளது என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது.
மேலும், 2026-27-ம் ஆண்டில் பரிவர்த்தனை மதிப்பு ரூ.368 லட்சம் கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எளிமையான பயன்பாடு, பரிவர்த்தனை கட்டணம் இல்லாத வசதி, சிறிய கடைகள் முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை பரவிய பயன்பாடு, மலிவான செல்போன்கள் மற்றும் குறைந்த செலவு இணைய சேவைகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
English Summary
From small amounts crores UPI dominates 3140 times increase 10 years Shocking statistics