மதுரையில் எம்.ஜி.ஆர் சிலை சேதம் - வாலிபர் கைது.!!
youth arrested for damage mgr statue in madurai
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் இடத்தின் அருகே 2½ அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலையானது பீடத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு கீழே விழுந்து சற்று சேதம் அடைந்த நிலையில் கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி அதிமுகவினர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் சிலையை சீரமைத்து அதே இடத்தில் நிறுவினர். தொடர்ந்து இந்த சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன் முடிவில் அவனியாபுரம் அருணகிரிநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜவகர் மகன் மணிமாறன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால், அவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
youth arrested for damage mgr statue in madurai