கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டதாக புகார் எதுவும் வரவில்லை - காவல் ஆணையர் விளக்கம்!
young woman kidnapped Coimbatore case Police Commissioner explains
கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் வழங்கியுள்ளார்.
இருகூர் தீபம் நகர் பகுதியில், நேற்று மாலை ஒரு வெள்ளை நிற கார் வந்து, அதில் இருந்தவர்கள் ஒரு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். இதையடுத்து, காவல் ஆணையர் வெளியிட்ட விளக்கத்தில், 100-க்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவம் பதிவு செய்யப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகளை பல இடங்களில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அவரது கூறுகையில், சூலூரில் இருந்து ஏஜி புதூர் பகுதிவரை உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்த காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பேக்கரி கடையின் காட்சிகளில் வெள்ளை கார் தென்பட்டாலும் வாகன எண் தெளிவாக இல்லை. மேலும், அந்த காட்சிகளின் அடிப்படையில், காருக்குள் பெண் இருந்தது உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வுக்கு இதுவரை எந்த தனிப்பட்ட புகாரும் வராத நிலையில், மேற்கொள்ளப்பட்ட சிசிடிவி ஆய்வின் மூலம் வாகன எண் தெளிவானதும் அடுத்த கட்ட விசாரணை தொடங்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.
English Summary
young woman kidnapped Coimbatore case Police Commissioner explains