உலக சுற்றுச்சூழல் தினம்.. திருவள்ளூரில் விதை வங்கி துவக்கம்!
World Environment Day Seed Bank launched in Tiruvallur
திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விதை வங்கி தொடக்கம் நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே ஈக்காடு தனியார் அரங்கத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், வனம், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விதை வங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ந.சுலோச்சனா தலைமை வகித்தார். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன் வரவேற்றார். இதில் ஐ.ஆர். சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து செங்குன்றம் வனச்சரக வனவர் எம்.சக்திவேல், மரங்களை வளர்த்தும் காடுகளை பராமரித்தும் வந்தால் நம் அனைவருக்கும் சிறந்த ஆக்சிஜன் கிடைக்கும். மேலும் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த பயனுள்ள விதத்தில் அமையும் என்றார். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் எ.இளையராஜாவும், விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை கடைபிடிப்பது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி பூர்ணிமாவும் எடுத்துரைத்தனர். அதையடுத்து வேளாண் உழவர் நலத்துறை சார்பில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டி பிரதிகளை விவசாயிகள், பசுமை பாதுகாவலர்கள் வேளாண் துறையால் வழங்கப்பட்டது.
பின்னர் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய விதை வங்கி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு உதவி புரியும் வீட்டுத்தோட்டம் அமைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த விதைகள் சேமித்து வைத்து அளிக்கலாம். பூண்டி மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் 51 ஊராட்சிகளில் காலநிலை தாங்கும் திறன், சுற்றுப்புற சூழலில் சமூக அக்கறை உள்ள பசுமை பாதுகாவலர்கள், கிராமங்களில் கிடைக்கும் விதைகளை சேமித்து மண் குடுவையில் வைத்து தேவையானோருக்கு இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் விதை கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் வனத்துறை மூலம் பங்கேற்ற மகளிர் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதற்கு முன்னதாக கிராமங்களில் மாணவ, மாணவிகள் சுற்றுப்புறச் சூழல் குறித்து வரைந்த ஓவியங்கள் விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் வெளியிட்டனர். இதில் நிறைவாக களப்பணியாளர் கல்யாணி நன்றி கூறினார்.
English Summary
World Environment Day Seed Bank launched in Tiruvallur