உழைப்பாளி மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய பெண்...! - 500 ரூபாய் போலி நோட்டு கொடுத்த விபரீதம்...!
woman who showed off her skills hardworking old woman tragedy giving fake 500 rupee note
சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (67), பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் சிறிய கடை அமைத்து பருவத்திற்கேற்ற பழங்களை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். மாம்பழ காலம் தொடங்கிய நிலையில், வழக்கம்போல் அவர் நேற்று முன்தினம் மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அந்த நேரத்தில், மாம்பழம் வாங்க வந்த ஒரு பெண், குழந்தைகள் விளையாடும் போலியான 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து, 150 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை வாங்கி மீதிப் பணத்தையும் பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.சிறிது நேரம் கழித்து, தன் பையில் இருந்த 500 ரூபாய் நோட்டைக் கவனமாக பார்த்தபோது ஜெயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினரிடம் காட்டியபோது அது போலி நோட்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கண்கலங்கிய நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வியாபாரத்திற்கு துணையாக இருந்த கணவர் உயிரிழந்த பின்னர், தனியாகவே பழ வியாபாரம் செய்து, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான செலவுகளை மேற்கொண்டு வருவதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மூதாட்டியை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்பட்ட எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (35) என்பவரை காவலர்கள் கைது செய்து, பின்னர் எச்சரிக்கை வழங்கி காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த விசாரணையில், “பல ஆண்டுகளாக அந்த மூதாட்டியிடம் பழம் வாங்கி வருகிறேன். எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் யாரோ கடைகளில் கிடைக்கும் போலி 500 ரூபாய் நோட்டைக் என் பையில் வைத்திருக்கலாம்; அதனை அறியாமல் நான் கொடுத்து வாங்கிவிட்டேன்” என்று அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில், அந்த பெண் இரவோடு இரவாக தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
woman who showed off her skills hardworking old woman tragedy giving fake 500 rupee note