சென்னை–பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை ஏன் தாமதம்: எப்போது கட்டுமானம் முடியும்! காரணங்களை விளக்கிய மத்திய அரசு - Seithipunal
Seithipunal


நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த காலக்கெடுவை கடந்தும் நிறைவடையாமல் தாமதமாகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை–பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ஏன் தாமதமானது என்பது தொடர்பான முக்கிய விளக்கங்களை மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடியும் என ஆரம்பத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்ட சிக்கல்கள், தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் காரணமாக பணிகள் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமானதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியில் ஒப்பந்ததாரர் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியைத் தவிர மற்ற எல்லா பணிகளும் ஜூன் 2026க்குள் நிறைவடையும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

கர்நாடகப் பகுதியில் 71 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் ஏற்கனவே முடிவடைந்து மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளில்தான் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களில் சேர்த்து 191.8 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட வேண்டும். இதற்காக மொத்தம் ₹13,247 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இதுவரை ₹9,126 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஆந்திராவில் 87 சதவீதமும், தமிழ்நாட்டில் 79 சதவீதமும் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் குடிபாலா–வாலாஜாப்பேட்டை பகுதியில் 92 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் ரயில்வே ஒப்புதல் தாமதம் மற்றும் கடினமான பாறைகள் இருப்பது போன்ற காரணங்களால் இங்கு வேலைகள் மெதுவாக நடைபெற்றன.

வாலாஜாப்பேட்டை–அரக்கோணம் பகுதியில் மின் கம்பிகள் மற்றும் ரயில்வே கட்டமைப்புகளை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம் கட்டுமானத்தை பாதித்தது. இதில் அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியில்தான் மிக மோசமான நிலை காணப்படுகிறது. அந்தப் பகுதியில் வெறும் 54 சதவீதம் மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இப்பகுதிக்கான ஒப்பந்ததாரர் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 2025 மே மாதம் முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இணைப்புச் சாலை பணிகள் 24 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடு, டிசைன் மாற்றங்கள் மற்றும் மழை ஆகியவை இதற்குக் காரணமாக கூறப்படுகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தில் பெத்தமங்களா–பைரெட்டிபள்ளி பகுதி 96 சதவீதமும், பைரெட்டிபள்ளி–பங்காரூபாளையம் பகுதி 80 சதவீதமும் நிறைவடைந்துள்ளது. அங்கு தேசிய வனவிலங்கு வாரிய நிபந்தனைகள் மற்றும் உயர் அழுத்த மின்கம்பிகள் இடமாற்றம் போன்றவை தாமதத்திற்கு காரணமாக இருந்தன.

மொத்தமாக, அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியைத் தவிர சென்னை–பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளும் ஜூன் 2026க்குள் நிறைவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is the Chennai Bangalore Expressway delayed When will the construction be completed The central government explained the reasons


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->