பெண்கள் கேமரா போன்களை பயன்படுத்த தடை; ராஜஸ்தானில் 15 கிராம பஞ்சாயத்துகளில் விசித்திர தீர்மானம்..!
In Rajasthan 15 village councils have passed resolutions banning young women from using camera phones
ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அந்தந்த கிராம பஞ்சாயத்துகள் தடை வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிபூர் கிராமத்தில், இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தில் இந்த விசித்திர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்த தடை அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கேமரா உள்ள ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமைக்கு குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் கிராமங்களின் தலைவர் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு, இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். அத்துடன், மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். இதனால், அந்த ஜோடி இது தொடர்பாக காவல்துறையை அணுகியது.
அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தி பேசியிருந்த நிலையில், தற்போது மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
In Rajasthan 15 village councils have passed resolutions banning young women from using camera phones