விவசாயிகளுக்கு எளிய முறையில் கடன் வழங்குவோம்… இபிஎஸ் உறுதி!
We will provide loans to farmers in an easy way EPS assured
குழந்தைகளுக்கு ஆலோசனை சொல்லி வளர்த்தால் தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்று ’திருவண்ணாமலையில் இபிஎஸ் அறிவுரை கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இதையடுத்து அவர்களுடன் பேசிய இபிஎஸ், ‘’விவசாயிகள் நெசவாளர்கள் நலனுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்கு எல்லா உறுப்புகளும் இருந்தால்தான் அவன் மனிதனாகக் கருதப்படுவான். அதுபோல பல்வேறு அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்தால்தான் நாடு வளரும். ஒவ்வொரு அமைப்பிலும் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் உங்கள் குறைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஒரு அரசுக்கு வருவாய் முக்கியம். அது இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்ற முடியாது.
அது போலத்தான் தொழிலும். தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பாக அரசு இருக்க வேண்டும். அவர்கள் எந்த அளவுக்குத் தாக்குபிடிக்க முடியுமோ அவ்வளவுதான் வரி விதிக்க வேண்டும். ஆனால் இன்றைய அரசு அப்படி அப்படி அல்ல.
அதிமுக ஆட்சியில் குறிப்பாக நான் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சோதனைகளை சந்தித்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் முதல்வரானபோது கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கினோம். தமிழக வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய முதல் அரசு எங்கள் அதிமுக அரசு.
இங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் பல்வேறு பிரச்சினைகளை தெரிவித்துள்ளீர்கள். அனைத்தும் எங்கள் கவனத்தில் உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியின் வளர்ச்சியில்தான் உள்ளது. எங்கள் ஆட்சியில் பல கல்லூரிகளைத் திறந்துள்ளோம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எங்கள் குழந்தைப் பருவத்தில் 5 அல்லது 6 வயதில்தான் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஆனால் இன்று குழந்தை பிறந்த 3 ஆண்டுகளிலேயே எல்.கே.ஜி, யுகேஜி என்று படிக்க வைக்கிறார்கள்.
இன்றைக்கு கல்வியில் உலக அளவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இதையெல்லாம் எண்ணித்தான் அதிமுக அரசு செயல்பட்டது. இங்கு நிலம் எடுப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒரு பக்கம் நாடு வளரும்போது வாகனங்கள் அதிகரிக்கின்றன. இன்றைக்கு 10 பஸ் ஓடினாலும், எது வேகமாக ஓடுமோ அதில்தான் ஏறுவார்கள். ரயில்களிலும் அப்படித்தான். உலகம் இன்று வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வேகத்துக்கு ஏற்ப அரசு செயல்பட்டால்தான் நாடு வளர முடியும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்த ஒரே அரசு எங்கள் அரசு. காவிரி - கோதாவரி ஆறுகளை இணைப்பதற்குத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த இருந்தோம். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நாங்கள் நிதி ஒதுக்கினோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்களில் தூர்வாரினோம்.
நதி நீரை சுத்தப்படுத்த ‘நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை கொண்டுவர பாரதப் பிரதமரிடம் பேசி இந்த ஆண்டு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கச் செய்தோம்.
சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாகக் கூறினார்கள். இதையெல்லாம் குறைக்கத்தான் மத்திய அரசிடம் பேசி பல மேம்பாலங்ள் கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி நாம் சொல்லித்தர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றினால்தான் விபத்துகளை குறைக்க முடியும். இன்றைக்கு வாகன்ங்கள் பலவும் 100 கிலோமீட்டர் வேகத்துக்கு போகின்றன. வேகமாகச் செல்லும் வாகனங்களைத்தான் எல்லோரும் வாங்குகிறார்கள். வேகம் ஆபத்தானது என்பதை யாரும் உணர்வதில்லை. நாம் இளைஞர்களுக்கு இதில் ஆலோசனை சொல்ல வேண்டும்.
முன்பு வீட்டில் 3 குழந்தைகள் 4 குழந்தைகள் பிறந்தன. இப்போது பலரும் 2வது குழந்தைக்கே போவதில்லை. ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இப்போது நம் குழந்தைகளை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். சில பெற்றோர் குழந்தைகளுக்கு அதிக பாசம் காட்டுவதால் விளைவுகள் மோசமாக இருக்கின்றன. நாம் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தவிர்க்க முடியும். அதிமுக ஆட்சியில் எந்த இடத்தில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து அங்கு விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
உள்கட்டமைப்பை அதிகப்படுத்தினால்தான் வாகனங்களை தடையில்லாமல் கொண்டுசெல்ல முடியும். அதற்கு சாலை விரிவாக்கம் அவசியம். நிறைய கல்லூரிகளை திறந்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் 1 மருத்துவக்கல்லூரிகூட திறக்கப்படவில்லை. ஆனால் கடன் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். அதோடு அரசின் வருவாயும் கடந்த 2021-ம் ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஆனால், அதை வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை.
கொரோனா காலத்தில் அரசுக்கு வரி வருவாயே கிடையாது. அப்படி இருந்தாலும் அதிமுக அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனாவை கட்டுப்படுத்த செயல்படுத்தினோம். இவர்களுக்கு கூடுதல் வருவாய் வந்தும், கடன் வாங்கியும் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இந்த கடனை எப்படி அடைப்பது என்றும் தெரியவில்லை.
ஒரு அரசு குறிப்பிட்ட அளவுதான் கடன் வாங்க வேண்டும். மத்திய அரசு நிர்ணயித்த அளவுதான் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் தனி பாதையில் போய்க்கொண்டு இருக்கிறார். நாட்டைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக இருக்கிறது. எங்கள் ஆட்சி வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம். விவசாயிகளுக்கு எளிய முறையில் கடன் வழங்குவோம்…’’ என்று உறுதி வழங்கினார்.
இதையடுத்து திருவண்ணாமலையில் இன்று மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பலரும் எடப்பாடி பழனிசாமி முன்னலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
English Summary
We will provide loans to farmers in an easy way EPS assured