கூலி கொடுத்து மக்களை திரட்டி செய்யும் 'ரோடு ஷோ' முற்றாகத் தடை செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்..!
Thirumavalavan insists that road shows should be completely banned
தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிக் கடுமையான வெயிலில் அவர்களை காக்க வைத்து அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் ஏற்கனவே நடந்துள்ளன.
இவ்வாறு மக்களை, கூலி கொடுத்து திரட்டி, மணிக்கணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் 'ரோடு ஷோ' முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும், என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ரோடு ஷோ, பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு விதிமுறைகள் வகுக்கப்படுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர் வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற 'வாக்குப் பண்டங்களாகவும்' ஆக்குகிறது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிக் கடுமையான வெயிலில் அவர்களை காக்க வைத்து அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் ஏற்கனவே நடந்துள்ளன.
மக்களைத் திரட்டும் கூட்டங்களும் கூட ஊருக்கு ஒதுக்குப்புறமாக பொதுமக்களுக்கு இடையூறின்றியே கூட்டப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 'ரோடு ஷோக்கள்' என்ற பெயரில் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதன் உச்சகட்டமாகவே கரூரில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளன.
'ரோடு ஷோக்கள்' என்ற முறை அரசியல் பிரசாரங்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தினால் தேர்தல் காலங்களில் அவற்றைத் தேர்தல் கமிஷன் தடை செய்திருக்கிறது. மற்ற நேரங்களிலும் இவற்றை முறைப்படுத்துவது அவசரத் தேவையாகி உள்ளது.

மேலும்,
01. ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு போன்ற வடிவங்களே தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும். தற்போது நடைமுறையில் உள்ளதைப்போலவே அவற்றுக்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட வரைமுறைகள் பின்பற்றப்படுவதுடன் அவற்றை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்.
02. மக்களை, கூலி கொடுத்து திரட்டி, மணிகணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் 'ரோடு ஷோ' முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
03. தேர்தல் பிரசாரத்தின் போதும் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் இரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும். வாக்காளர்களிடம் கருத்துகளை எடுத்துச் சொல்லப் பொதுக்கூட்டம் என்ற வடிவத்தைமட்டுமே அனுமதிக்க வேண்டும்.
04. சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெருகியுள்ள நிலையில் அவற்றின் மூலமாகவே தேர்தல் பிரசாரம் நடைபெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
05. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் நேரடியாக ஓட்டு சேகரிக்கும் நடவடிக்கைகளால், ஏராளமான பொருள் செலவுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுப்பது மட்டுமின்றி; சாதி, மத அடிப்படையில் பிரிவினை உணர்வு தலை தூக்குவதற்கும் காரணமாகிறது. வேட்பாளர்கள் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாகவே ஓட்டு சேகரிப்பதை ஊக்குவிக்க வேண்டும். நேரடியாக வாக்காளர்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டும்.
06. சமூக ஊடகங்களின் பெருக்கம் வெறுப்புப் பிரசாரம் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. வெறுப்புப் பரப்புரையைத் தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்துக் காலங்களிலும் முற்றாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும். என்று அந்த திருமாவளவன் கூறியுள்ளார்.
English Summary
Thirumavalavan insists that road shows should be completely banned