பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவம் ஆடிய கல்மேகி சூறாவளி; 114 பேர் பலி: 127 பேர் காணாமல் போயுள்ளனர்; தேசிய பேரிடராக அறிவிப்பு..!
Typhoon Kalmaegi declared a national disaster in the Philippines
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, ஏராளமான கார்கள், டூவீலர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்துக்கும் பாதித்துள்ளது.
இந்த கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியதில், இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பேரழிவுகளை தொடர்ந்து தேசிய பேரிடராக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அறிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக அந்நாட்டின் தெற்கு லெயிடின் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. செபு மாகாணமும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 'கல்மேகி' புயல், தற்போது அதிகரித்து வரும் காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக கல்மேகி உருவாகியுள்ளது.
இதன்காரணமாக, கடலோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வியட்நாமின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக 8 மீ (26 அடி) வரை அலைகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆறு விமான நிலையங்கள் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வியட்நாமின் துணைப் பிரதமர் டிரான் ஹாங் ஹா, கல்மேகி மிகவும் அசாதாரணமான புயல். அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது மழை முற்றிலுமாக நின்று விட்டது, வெயில் அடிக்க தொடங்கிய நிலையிலும், வீடுகள் இன்னும் சேற்றால் நிரம்பியுள்ளதாகவும், பல வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளதாக பிலிப்பைன்ஸில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூறாவளி, வெள்ளம் காரணமாக பிலிப்பைன்ஸில் 05 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Typhoon Kalmaegi declared a national disaster in the Philippines