அது எங்களுக்கு தேவையில்லை.. மீனவர்கள் போராட்டம்!
We do not need that Fishermens protest
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் ஒன்றுகூடி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஏராளமான படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன.
மேலும் கடியபட்டணம் புனித பேதுரு பவுல் ஆலயம் முன்பு ஒன்று கூடிய திரளான பெண்கள் உள்பட மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி திரண்டனர்.அதுமட்டுமல்லாமல் பிறகு கைகளில் பதாகைகள் ஏந்தியபடியும், கோஷமிட்டபடியும் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி ஊரின் முக்கிய தெருக்கள், பஸ் நிலையம் வழியாக கடற்கரை மைதானத்தை சென்றடைந்தது. அங்கு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
English Summary
We do not need that Fishermens protest