மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி..!
Water inflow to Mettur Dam continues to increase
இன்று காலை 75.64 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 04 மணி நிலவரப்படி 76.18 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 19,119 கன அடியாக இருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 19,264 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 73.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தற்போது 03 அடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அணையின் நீர் இருப்பு 38.25 டிஎம்சியாக உள்ளது.
அத்துடன், கேரளாவின் வயநாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 05 நாட்களாக காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மேட்டூர் அணைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வரும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Water inflow to Mettur Dam continues to increase