தமிழ்நாட்டில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் இடங்கள்; விபரங்கள் உள்ளே..!
Wartime security drill to be held tomorrow in Tamil Nadu Details inside
பஹ்ல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய -பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் அணைத்து மாவட்டங்களிலும் போர் கால ஒத்திகை நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி சில முக்கிய இடங்களில் போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்கள் தலைமையில் கடந்த 06-ஆம் தேதி மாநில மற்றும் மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

அத்துடன், நாளை (வெள்ளிக்கிழமை) போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு - 2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது. இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கிறது. இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.
இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Wartime security drill to be held tomorrow in Tamil Nadu Details inside