தென்காசி மாவட்டங்களில் பட்டியல் இன கிறிஸ்துவ மக்கள் மீது கொடூர அரிவாள் வெட்டுத் தாக்குதல் - 9 பேர் காயம்; சாலை மறியல் போராட்டம்!
Violent Sickle Attacks on SC Communities in Tenkasi and Tirunelveli Leave 9 Injured Residents Stage Road Blockade
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து இருவேறு கிராமங்களில், பட்டியல் இன (Scheduled Caste) மக்கள் மீது ஆதிக்கச் சாதி கும்பல்களால் நடத்தப்பட்ட கொடூர அரிவாள் வெட்டுத் தாக்குதல்கள் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நாங்குநேரி பெரும்பத்து பாணியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொடூரம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில், பட்டியல் இன மக்கள் வாழும் தெருவிற்குள் புகுந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு கும்பல், அங்கிருந்தவர்கள் மீது அரிவாள்களால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது.
6 பேர் காயம்: இந்த கண்மூடித்தனமான அரிவாள் வெட்டுத் தாக்குதலில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனைக்கு மாற்றம்: காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் பலத்த காயமடைந்த 5 பேர், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (TvMC) மாற்றப்பட உள்ளனர்.
மன்னார் கோவில் கிராமத்திலும் வன்முறை:
இதே போன்றதொரு கொடூரத் தாக்குதல் திருநெல்வேலி மாவட்டத்தின் மன்னார் கோவில் கிராமத்திலும் வியாழக்கிழமை அன்று அரங்கேறியுள்ளது. அங்கும் புகுந்த 8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், மூன்று நபர்களை அரிவாள்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த ஒரு நபர் தீவிர சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த வன்முறைகளைத் தொடர்ந்து, கிராமங்களிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் இன கிறிஸ்துவ மக்கள் சாலை மறியல்:
நெட்டூர் கிராமத்தில் 6 பேரைத் படுகாயப்படுத்திய இந்தத் திட்டமிட்ட அரிவாள் வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன கிறிஸ்துவச் சமூக (SC Christian) மக்கள் தற்பொழுது வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி அவர்கள் நடத்திய அதிரடிச் சாலை மறியல் (Road Blockade) போராட்டம் காரணமாக, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் சாதியப் பதற்றமும் நிலவி வருகிறது.
English Summary
Violent Sickle Attacks on SC Communities in Tenkasi and Tirunelveli Leave 9 Injured Residents Stage Road Blockade