விஜயகாந்த் கொடுத்த தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்!2026ல் கடுமையான போட்டி நிலவும் – டிடிவி தினகரன் கணிப்பு
Vijay will make the impact Vijayakanth made There will be a tough competition in 2026 TTV Dhinakaran predicts
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக மட்டுமின்றி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் களத்தில் இறங்கியதால் போட்டி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தொடங்கியதும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் இணைந்துள்ளனர். அதேசமயம், திமுக–அதிமுக மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விஜய் கட்சியை நோக்கிச் செல்லக்கூடும் என்ற கணிப்பும் நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு வித்தியாசம் தவெக காரணமாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது தவெக சுமார் 10 சதவீத வாக்குகள் பெறும் வாய்ப்பு உண்டு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “விஜயின் கட்சி பற்றி ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனது பார்வையில், 2006 சட்டசபைத் தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை, 2026 தேர்தலில் விஜய் ஏற்படுத்தக்கூடும். தவெக காரணமாக அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு. இது யதார்த்தமான நிலைமையே” என்று கூறினார்.
அதேவேளை, “அதற்காக நான் தவெகவுடன் கூட்டணி செல்கிறேன் என்று அர்த்தமில்லை. எங்களின் கூட்டணி குறித்து இறுதி முடிவு டிசம்பர் மாதத்திற்கு பின் வெளியாகும். நண்பர்கள், கருத்துக் கணிப்புகள் வழியாக கிடைக்கும் தகவல்களைப் பார்த்தே நான் கூறுகிறேன்” என தினகரன் தெளிவுபடுத்தினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை தடுக்க அமமுக முக்கிய பங்கு வகித்தது. சுமார் 11 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு நேரடியாக அமமுக காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்குள் அமமுகவை இணைக்கும் முயற்சி நடைபெறுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ள நிலையில், தவெக களத்தில் இறங்கியிருப்பது அரசியல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
English Summary
Vijay will make the impact Vijayakanth made There will be a tough competition in 2026 TTV Dhinakaran predicts