பொது சின்னம் கேட்டு த.வெ.க. விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
vijay ask public symbol to election commission
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்போது முதலே நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது சின்னம் கேட்டு டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து கட்சியின் தலைவர் விஜய் தற்போது கட்சிக்கான சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். பொதுவாக, தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் போட்டியிடுவார்கள்.

234 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குவது வழக்கம். மேலும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குகிறது.
இதற்காக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் மாதத்தில் தங்களது கட்சிக்கு பொது சின்னத்தை கேட்டு தமிழக வெற்றிக் கழகம் விண்ணப்பிக்கவுள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சுயேச்சை சின்னத்தில் மூன்றை தேர்வு செய்து தங்களுக்கான பொது சின்னத்தை கேட்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. பொது சின்னத்தை தேர்வு செய்து, டிசம்பரில் தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. விண்ணப்பிக்கும்பட்சத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் காலக்கட்டத்திற்கு முன்பு சின்னம் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அவ்வாறு பொது சின்னம் ஒதுக்கப்பட்டால் அதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தி.மு.க.வுக்கு உதயசூரியன், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை போல தனது கட்சிக்கு மக்களை எளிதில் கவரும் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.
English Summary
vijay ask public symbol to election commission