கோவை மாணவி வன்கொடுமை:''எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம்'': துணை ஜனாதிபதி கண்டனம்..!
Vice President condemns Coimbatore student rape incident as a cruel act that should not happen to any woman
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மதுரையை சேர்ந்த 20 வயது மாணவி, விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் 03 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
ஆண் நண்பர் கொடுத்த தகவலையடுத்து, போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அரிவாளால் தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களின் காலில் சுட்டு பிடித்துள்ளனர். மாணவி கூட்டு பலாத்கார சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியதாவது: உண்மையில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம். அதுவும் நம்முடைய கொங்கு மண்ணில் நடந்துள்ளது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல்துறையின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிச்சயம், காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த சகோதரிக்கும், அவருடைய பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Vice President condemns Coimbatore student rape incident as a cruel act that should not happen to any woman