ஓயாத விலை உயர்வு...மீண்டும் ஏறியது பெட்ரோல், டீசல் விலை...! - 10 நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு...!
Unrelenting price hike Petrol and diesel prices hiked again Petrol and diesel prices increased 3rd time 10 days
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் உருவான கட்டுப்பாட்டு சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது.
இதன் தாக்கம் இந்திய எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் கடந்த 15-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக எரிபொருள் விலையில் பெரிய மாற்றமின்றி நிலைத்திருந்த சூழலில், இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் ஏற்றத்தாழ்வுகளுடன் மாற்றமடைந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் சரிவடைந்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.51-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.96.13-க்கு விற்பனையானது.இந்த நிலையில், இன்று மீண்டும் எரிபொருள் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.98-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Unrelenting price hike Petrol and diesel prices hiked again Petrol and diesel prices increased 3rd time 10 days