சாட்சிகளை தன்னுடன் வைத்துக்கொண்டு பொய் பேசலாமா.? மு.க ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாதீர்மானத்தின் போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1989 ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை திமுகவினர் மானபங்கம் செய்துவிட்டு தற்பொழுது திரௌபதி பற்றி பேசுவது அபத்தமானது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை" என தெரிவித்திருந்தார்.

மு.க ஸ்டாலின் இந்த மறுப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 1989ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே !

மாண்புமிகு அம்மா அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டி அ.தி.மு.க. என ஆரம்பித்து வெளியேறிய திரு.திருநாவுக்கரசு அவர்கள் சொன்னதாக வெளியான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மா அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு திரு.ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தவரையில் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஏன் அவரது தந்தை மறைந்த திரு.கருணாநிதி கூட இந்த சம்பவத்தை மறுத்தது இல்லை. ஆனால் அம்மா அவர்கள் உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV response to MKStalin comment on Jayalalitha humiliation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->