சுனாமிபோல் சீறிய வெள்ளம்... உயிரைக் காப்பாற்ற ஓட்டம்...! - நேபாள பேரழிவில் தப்பிய தமிழக பயணிகள் உருக்கம்..!
Tsunami like floods Running save lives Tamil Nadu tourists who escaped Nepal disaster melting
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை திரும்பிய பின்னர் தாங்கள் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான தருணங்களை கண்ணீர் மல்க பகிர்ந்துகொண்டனர். “சுனாமியைப் போல் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இருந்து உயிரைக் காப்பாற்ற ஓடினோம்” என்று அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த சத்யா கூறியதாவது,"கைலாஷ் யாத்திரைக்காக சென்னை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் குழுவாகப் புறப்பட்டுச் சென்றோம்.

புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக சீனாவில் இருந்தபோது, சம்பவத்தன்று காலை சுமார் 8 மணியளவில் சோதனை நடைபெற்றது.அப்போது நாங்கள் 3 பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தோம். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென தொலைவில் ஏதோ புழுதி எழுவது போல் தெரிந்தது.
முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அந்தக் காட்சியை செல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தோம்.ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தக் காட்சி முற்றிலும் மாறிவிட்டது. பிரமாண்டமாக எழுந்த வெள்ளம் சுனாமியைப் போல் எங்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.
அதன் ஆபத்து உடனடியாக எங்களுக்குப் புரியவில்லை. சுற்றிலும் இருந்தவர்கள் வெள்ளம் வேகமாக வருவதைக் கண்டு பதற்றத்துடன் ஓடத் தொடங்கிய பிறகுதான் நிலைமையின் தீவிரம் எங்களுக்கு தெரியவந்தது.உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பதற்றத்தில் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கி நாங்களும் ஓடினோம்.
பின்னர் நேபாளத்தில் மீட்புக்குழுவினர் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். சுமார் 3 மணி நேரம் மரங்களைப் பிடித்துக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றோம். அப்போது அடர்ந்த பகுதியில் இருந்த முட்கள் குத்தியதில் எங்களது கைகளில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு செய்த உதவி அளவிட முடியாதது. தங்கத்தட்டில் வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்ததுபோல், தமிழக அரசு எங்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது. இவ்வளவு அக்கறையுடன் எங்களுக்கு துணை நின்ற தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு சத்யா தெரிவித்தார்.
டெல்லியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை கண்காணிக்கும் அமைச்சர்கள்
இதுதொடர்பாக அமைச்சர் ஆனந்த் கூறியதாவது,"நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகிய 4 பேரும் டெல்லியில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.அவர்கள் அங்கிருந்து மீட்பு நிலவரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் முதல்-அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
4 அமைச்சர்களும் டெல்லியில் நேரடியாக முகாமிட்டு பணிகளை ஒருங்கிணைத்து வருவதால், அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
English Summary
Tsunami like floods Running save lives Tamil Nadu tourists who escaped Nepal disaster melting