கலைக்கட்டியுள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா; 'மிஸ் கூவாகம்' அழகி போட்டியில் திருநங்கைகள் ஒய்யார நடை..!
Transgender women sashay gracefully in the Miss Koovagam beauty pageant at the festive Koothandavar Temple festival
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வரும் 28-ஆம் தேதி நடவுபெறவுள்ளது.
அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஸ்ரீலங்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
அடுத்தநாள், (29-ஆம் தேதி) கூத்தாண்டவர் தேரோட்டம் நடக்கிறது. இதன்பிறகு அரவான் களப்பலி நிகழ்ச்சி, திருநங்கைகள் தாலி அறுத்து, வளையல் உடைத்து விதவைக்கோலம் பூண்டு சோகத்துடன் தங்கள் ஊருக்கு திரும்பும் நிகழ்வும் நடைபெரும்.
அடுத்ததாக, வரும் 30-ஆம் தேதி விடையாத்தியும் மே 01ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கு வரும் அவர்கள் தங்களுக்கு விருப்பமான உடை அணிந்து, அழகுபடுத்திக்கொண்டு சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.
இந்த கூத்தாண்டவர் திருவிழா குறித்து தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஜீவா அம்மன்நாயக் கூறுகையில், ''திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சென்னை தொண்டு நிறுவனங்கள் சார்பில் இன்று (26 -ஆம் தேதி) மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மிஸ் கூவாகம்- 2026 அழகிப்போட்டி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முதலில் தமிழக அரசுக்கு சார்ந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழக திருநங்கைகளின் அணி வகுப்பு, மிஸ் கூவாகம் திருநங்கை - 2026 தேர்வு, நடன நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Transgender women sashay gracefully in the Miss Koovagam beauty pageant at the festive Koothandavar Temple festival