தனிமையில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்...! கழுத்தை அறுத்து நகைகளை அள்ளிச் சென்ற மர்ம கும்பல்...!
tragedy befell lonely old woman mysterious gang slit her throat and stole her jewelry
தூத்துக்குடியில் புதூர் அருகேயுள்ள வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கலாவதி (62). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், வயதான தம்பதியினர் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று இரவு வழக்கம்போல் கலாவதி வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். அவரது கணவர் கண்ணன் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்தார்.

இன்று அதிகாலை வீட்டுக்குள் சென்ற கண்ணன், கலாவதி கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, கொடூரக் கொலையின் அதிர்ச்சி காட்சி அனைவரையும் உறைய வைத்தது.மேலும், கலாவதி அணிந்திருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 8 சவரன் தங்கத் தாலிச் செயின் காணாமல் போயிருந்தது.
இதனால், நகையை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் புதூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் மற்றும் காடல்குடி காவலர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வயதான தம்பதியினர் மட்டும் வீட்டில் வசித்து வந்ததை முன்கூட்டியே கண்காணித்த மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கொலையையும் கொள்ளையையும் அரங்கேற்றியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை ஆய்வுக் குழுவினர் சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். ஆய்வின்போது, வீட்டிற்குள் வசிப்பவர்களுடன் தொடர்பில்லாத இரு நபர்களின் கைரேகைகள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், மோப்ப நாய் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.கலாவதியின் உடலை காவலர்கள் மீட்டு, உடற்கூறாய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை விரைவாக கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் வடமலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tragedy befell lonely old woman mysterious gang slit her throat and stole her jewelry