கண்ணிமை கிழிந்து 9 தையல்... பார்வையும் பாதிப்பு..! ஆறுமுகநேரியில் வாலிபரை லத்தியால் தாக்கிய 2 போலீசார் இடமாற்றம்...!
Torn eyelid 9 stitches vision affected 2 policemen who attacked youth with lathi Arumuganeri transferred
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய காவலர்கள், அதில் சென்ற இளைஞரை லத்தியால் தாக்கியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் பிரதான சாலையில் ஆறுமுகநேரி காவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆறுமுகநேரி மேலத்தெருவைச் சேர்ந்த அரசகுமாரின் மகன் விக்னேஷ் (25), தனது நண்பர் சூரியாவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

சோதனையில் இருந்த காவலர்கள் அவர்களை நிறுத்துவதற்காக சைகை செய்தனர்.ஆனால், அந்த சைகையை கவனிக்காமல் இருவரும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து காவலர்கள் லத்தியால் விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவரது முகம் மற்றும் கண் இமை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.உடனடியாக அவரை ஆட்டோ மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கண் இமை பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், காயம் காரணமாக அவரது பார்வைத்திறனும் ஓரளவு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.வாகன சோதனையின்போது ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞர் மீது லத்தியை பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் தொடர்ச்சியாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய கஜேந்திரன் (43) மற்றும் காவலர் காளி (31) ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அதிரடியாக உத்தரவிட்டார்.இந்த நடவடிக்கை ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துக்கு அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Torn eyelid 9 stitches vision affected 2 policemen who attacked youth with lathi Arumuganeri transferred