தவெகவில் இணைந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அதிரடி நோட்டீஸ்!
TN Speaker Issues Show Cause Notices to 4 Defected AIADMK MLAs Who Joined TVK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத இக்கட்டான சூழலில், பிற கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அண்மையில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
21 எம்.எல்.ஏ-க்களுக்கு மன்னிப்பு
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவளித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில், 21 பேர் தங்களது தன்னிச்சையான செயலுக்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவிற்கே திரும்பினர். அவர்களைத் தாராள மனதோடு மன்னித்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனும் அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது எனத் தெளிவுபடுத்தினார்.
தவெகவில் ஐக்கியமான நால்வர்
இருப்பினும், எஞ்சிய 4 முக்கிய விஐபி எம்.எல்.ஏ-க்களான ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது அதிமுக பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கட்சியில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர்.
சபாநாயகரின் 7 நாள் கெடு
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நால்வர் மீதும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் இன்னும் பேரவைச் செயலகத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்பொழுது அதிரடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸின் விபரம்: "நீங்கள் உங்கள் எம்.எல்.ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தது ஏன்? கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உங்கள் மீது ஏன் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கூடாது?" என்று சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் நால்வரும் சபாநாயகர் அலுவலகத்தில் தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நோட்டீஸ் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
English Summary
TN Speaker Issues Show Cause Notices to 4 Defected AIADMK MLAs Who Joined TVK