பரபரப்புக்கு மத்தியில் டெல்லி செல்லும் அண்ணாமலை - தமிழக வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பா?
tn bjp leader annamalai going to delhi
நாட்டில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, தமிழக பாஜக சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

அந்தக் குழுவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைநகர் டெல்லி செல்கின்றனர். இதனால், தேசிய தலைமை விரைவில் வெளியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தின் வேட்பாளர்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tn bjp leader annamalai going to delhi