நெல்லை கொடூரம்: செங்கல்லால் தாக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பரிதாப பலி!
Tirunelveli Panchayat President Dies After Being Hit by Brick During Water Shortage Protest Suspect Identified
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்துள்ள கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக மகாராஜன் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு நீண்டநாட்களாகக் குடிநீர் விநியோகம் சீராகக் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் நேரில் சென்று முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது இருதரப்பிற்கும் இடையே தர்க்கம் முற்றிப் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஆத்திரமடைந்து அங்கிருந்த செங்கல்லை எடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை நோக்கிக் வீசித் தாக்குதல் நடத்தினார். இதில் எதிர்பாராதவிதமாகச் செங்கல் தலையில் நேரடியாகப் பட்டதில், மகாராஜன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) விஷ்வேஷ் சாஸ்திரி கூறுகையில், "ஊராட்சி மன்றத் தலைவரைச் செங்கல்லால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; அவர் விரைவில் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tirunelveli Panchayat President Dies After Being Hit by Brick During Water Shortage Protest Suspect Identified