முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவர் விடுப்பு..!
Three Bawariya robbers sentenced to life imprisonment in former AIADMK MLA Sudarsanam murder case
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 03 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001- முதல், 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சுதர்சனம் இருந்தார்.இவர் பெரியபாளையம் அருகே உள்ள தானா குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த 2005 ஜனவரி 09-ஆம் தேதி தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சுதர்சனத்தின் மகன் விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோரை கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கினர்.
அத்துடன், வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்த போது, அவரையும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பின்னர், அந்தக் கும்பல், சுதர்சனம் வீட்டில் இருந்த, 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம், தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்தக கொலை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சம்மந்தப்பட்ட பவாரியா கொள்ளையர்களான, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை, 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என நீதிபதி எல். ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஓம்பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் ராகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அத்துடன், ஜெயில்தர் சிங்கை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Three Bawariya robbers sentenced to life imprisonment in former AIADMK MLA Sudarsanam murder case