மாணவர்களே உஷார்! அரசு லேப்டாப்பில்.. கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்தை அழித்தால் வாரண்டி கிடையாது! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதனைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. வழங்கப்பட்ட லேப்டாப்புகளில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களை சில மாணவர்கள் அழித்து, அதற்குப் பதிலாக தங்களுக்கு விருப்பமான அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டி, அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் செயலால், அந்த லேப்டாப்புகளுக்கான வாரண்டி உரிமை கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலவசத் திட்டங்கள் என்றாலே, “மக்களை சோம்பேறிகளாக்கும்”, “வாக்கு வங்கிக்கான அரசியல்” என்ற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நலத்திட்டங்கள் என்பது வெறும் இலவசங்கள் அல்ல; அது ஒரு சமூக பாதுகாப்பு வலை. ஒரு காலத்தில் டிவி இல்லாமல் பக்கத்து வீட்டின் வாசலில் அமர்ந்து டிவி பார்த்த 90களின் குழந்தைகளுக்கு, இலவச டிவி திட்டம் ஒரு கனவு நிறைவேறிய தருணம். அதேபோல், தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர் போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இன்று சாதாரணமாகத் தோன்றும் இவை, 10–15 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கியவையே.

மக்கள் நாள் முழுவதும் உழைத்தாலும், அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி இன்னும் திறந்தே உள்ளது. இந்தியாவில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக, 82% வேலைவாய்ப்புகளை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. ஆனால், அவற்றில் வெறும் 12% நிறுவனங்கள் மட்டுமே தங்களின் ஊழியர்களுக்கு காப்பீடு வழங்குகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இலவச காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள், மக்களை சோம்பேறிகளாக்குகிறதா அல்லது அவசியமான பாதுகாப்பை வழங்குகிறதா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

இந்தச் சூழலில் தான், இலவச லேப்டாப் திட்டம் ஒரு முக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்கியது. இந்தத் திட்டம் வருவதற்கு முன், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களை குறிவைத்து, கணினி கோச்சிங் சென்டர்கள் நோட்டீஸ் விநியோகிப்பது வழக்கமாக இருந்தது. அங்கு கற்பிக்கப்பட்டது பெரும்பாலும் MS Office போன்ற அடிப்படை விஷயங்களே. கம்ப்யூட்டரை நேரடியாக அணுகாத சாதாரண குடும்ப மாணவர்களுக்கு, பணம் கட்டி கோச்சிங் சென்டர்களில் படிப்பது சாத்தியமற்றதாக இருந்தது. மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பது, வேலைக்கு ரெஸ்யூமே அனுப்புவது போன்ற எளிய விஷயங்களுக்கும், மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை இருந்தது.

இலவச லேப்டாப் திட்டம் இந்த தடைகளை முற்றிலும் உடைத்தது. மாணவர்கள் கைகளில் லேப்டாப் வந்ததும், அவர்கள் அதை இயல்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்கள். படம் பார்க்கிறார்களா, கேம் விளையாடுகிறார்களா என்பதைக் கடந்தும், கணினியின் அடிப்படை பயன்பாடுகளை புரிந்து கொண்டார்கள். இதன் விளைவாக, வேலைக்கு செல்லும்போது கம்ப்யூட்டரை பார்த்து பயப்படாத தன்னம்பிக்கை உருவானது. சமானிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த இளைஞர்களின் மனத் தடையை இந்தத் திட்டம் அகற்றியது என்பதே அதன் மிகப் பெரிய வெற்றி.

ஆனால், இந்த நலத்திட்டத்தின் மத்தியில் தற்போது உருவாகியுள்ள புதிய போக்கு கவலைக்குரியது. லேப்டாப்புகளில் உள்ள அரசின் அடையாளங்களை திட்டமிட்டு அழித்தல் அல்லது மாற்றுதல், தொழில்நுட்ப ரீதியாக வாரண்டி விதிமுறைகளை மீறும் செயல் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாகவே, புதிய லேப்டாப்புகளில் வண்ணம் மாற்றப்பட்டாலோ, பிளாஸ்டிக் பகுதி சேதமடைந்தாலோ, வாரண்டி மறுக்கப்படும். அதேபோல், அரசு முத்திரை அல்லது அடையாளங்களை அறிந்தே சிதைப்பது, வாரண்டி இழப்புக்கான காரணமாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இலவச லேப்டாப் என்பது ஒரு அரசியல் சின்னம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் கல்வி, வேலை வாய்ப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை மாற்றிய ஒரு கருவி. அதை அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுத்துச் செல்லாமல், அதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு, மாணவர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதே இன்றைய அவசியமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no warranty if you delete the picture of Karunanidhi and Chief Minister Stalin on the government laptop


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->