2025-ஆம் ஆண்டில் அரசுப் பணிகளுக்காக சுமார் 20,471 தேர்வர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!
The TNPSC has announced that approximately 20471 candidates have been selected for government jobs in 2025
2025-ஆம் ஆண்டில் அரசுப் பணிகளுக்காக சுமார் 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025-ஆம் ஆண்டு 20471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9770 தேர்வர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க 11809 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாள் ஆகிய விவரங்களுடன் கூடிய ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிக்கைகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பணிகளின் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2025-ஆம் ஆண்டு 1007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் (shortfall) vacancies) நிரப்பப்பட்டுள்ளன. மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 761 குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தெரிவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2025-ஆம் ஆண்டு கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் இணையவழியில் அறிந்துகொள்ளும் வகையில் தேர்வாணையத்தின் வலையொளி (youtube) சேனல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பும் நடைமுறையும், கணினிவழி மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை உத்தேச விடைகள் வெளியிடும்போது தேர்வாணைய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறைகளில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாக 2025-ஆம் ஆண்டு அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறையும், தேர்வர்கள் தேர்வுக்கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதியும், தேர்வர்கள் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் இணையவழியில் மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி கொள்வதற்காக 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக (2024, 2025 மற்றும் 2026) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு / தொழிற்பயிற்சி நிலை ஆகியவைகளுக்கான அறிவிக்கைகள் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The TNPSC has announced that approximately 20471 candidates have been selected for government jobs in 2025