புதிய பேருந்து நிலையத்தை 2-தினங்களுக்கு திறக்க வேண்டும்..அதிமுக கோரிக்கை! - Seithipunal
Seithipunal


புதிய பேருந்து நிலையத்தை 2-தினங்களுக்கு திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதலமைச்சர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்:புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி மற்றும் திறப்பு விழா என்பது மர்ம தேசத்தின் மர்ம ரகசியம் போல் உள்ளது. புதிய பேருந்து நிலையம் விரிவாக்கப்பணி கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக பலமுறை அரசால் அறிவிக்கப்பட்டும் இன்றுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. அதிமுகவின் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு இன்று 30-05-2025 பேருந்து நிலையம் திறக்கப்படும் என அனைத்து நாளிதழ்களிலும் அரசால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதே போல் திறப்பு விழாவிற்கு மின் அலங்கார விளக்குகளும், பேருந்து நிலையம் வாயிலில் திறப்பு விழாவிற்காக வாழை மரம் உள்ளிட்ட தோரணங்கள் ஜோடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பு விழா நிறுத்தப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு துணைநிலை ஆளுநர் சம்மதம் தெரிவிக்கவில்லை என தகவல் வருகின்றன.ஸ்மார்ட் சிட்டி மூலம் ரூ.29.50 கோடிக்கு பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் துவக்கப்பட்ட பணி பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு பதிலாக வணிக வளாக விரிவாக்கம் பணி நடந்துள்ளது. ஏற்கனவே இருந்த கடைகளின் எண்ணிக்கை போல் இருமடங்கு கடைகள் அதிகப்படுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. கடை ஒதுக்குதல் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பையும் நகராட்சி நிர்வாகம் அமுல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அது சம்பந்தமாக இதுவரை மேல்முறையீட்டிற்கு ஏன் அரசு செல்லவில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். பேருந்து நிலையம் விரிவாக்கம் நடைபெறும் போதே அதில் நடக்கும் முறைகேடுகளும், தவறுகளும், பணம் வீண் விரயமும் நடைபெறுவதாக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சுமத்தினர்.

மக்களின் தேவைக்காக பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நிலையில் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி திறப்பு நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் மாளிகையால் தடுக்கப்பட்டுள்ளது. இது துர்திஷ்டவசமானதாகும். இதுபோன்ற செயல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், மாண்புமிகு முதலமைச்சரையும் அவமதிக்கும் செயலாகும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கூட்டணியில் உள்ள முதலமைச்சரை பலகீனப்படுத்தும் இச்செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். திறப்பு விழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா தடுக்கப்பட்டது ஏன் என்பதை ஆளுநர் மாளிகையும், தலைமை செயலாளரும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆளுநரின் அனுமதியை பெறாமலேயே திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தால் அதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசின் நிதியை முறையற்ற முறையில் ஒப்பந்தம் என்ற பெயரில் கொள்ளையடிக்க காரணமாக இருந்த சம்மந்தப்பட்ட எந்த அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக அரசின் சார்பில் அதில் நடைபெற்று உள்ள முறைகேடுகள் சம்பந்தமாக ஒரு சிறு அளவில் கூட உயர்மட்ட விசாரணையை அரசு நடத்தவில்லை. துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் அதற்கான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக ரூ.29.50 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்ட பணிக்கு மேலாக ரூ.4 கோடி கூடுதல் நிதி அந்த ஒப்பந்ததாரருக்கு ஏன் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் என்பது ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நேர்மையான நிர்வாகமாக இருக்க வேண்டும்.

பலகோடி ரூபாய் செலவில் செய்யப்படும் பல திட்டங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ஒரு சிறிய அளவில் கூட முயற்சி எடுக்காததோ அல்லது தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சீரழித்துவிடும். புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்தவர்களுக்கு நகராட்சியால் உரிய அனுமதி டோக்கன் வழங்கப்பட்டும் அவர்களுக்கு ஏன் கடை ஒதுக்கீடு இதுநாள் வரை அரசால் செய்யமுடியவில்லை.

தற்போது கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுவதால் தினசரி போக்குவரத்து நெரிசல் தற்காலிக பேருந்து நிலயைத்தில் அருகில் உள்ள ரோடியர்பேட், அங்குநாயக்கர் தோட்டத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதை அரசு உணரவில்லை. அதே போன்று கடலூர் சாலை, ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி பூமி பூஜை போடப்பட்டு பல மாதம் ஆகியும் அப்பணியும் செய்வதற்கு இந்த தற்காலிக பேருந்து நிலையம் இடைஞ்சலாக உள்ளதையும் அரசு உணரவில்லை. எனவே முதலமைச்சர் அவர்கள் ஓரிரண்டு தினங்களுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The new bus stand should be opened for 2 days AIADMK demands


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->