கார்டில்லா சொகுசு கப்பல் திட்டத்தை கைவிட வேண்டும்..அதிமுக மீண்டும் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


வரும் 4-ம் தேதி கார்டில்லா என்ற சுற்றுலா நிறுவன சொகுசு கப்பல் புதுச்சேரியில் கொண்டுவரப்பட உள்ள நிலையில் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

 ஆன்மீக பூமியாக இருந்த புதுச்சேரி மாநிலம் சுற்றுலா என்ற பெயரில் கலாச்சார சீரழிவை நோக்கி செல்கிறது. புதுச்சேரி நகரப்பகுதிகள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட  இடங்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் வெளிமாநிலத்தவருக்கு முழுமையாக தாரை வார்த்தது போன்று உள்ளது.

புதுச்சேரி மண்ணின் மைந்தர்களான மீனவ மக்களுக்கு உரிய கடற்கரை மீனவ கிராமங்கள் வெளிமாநில ஓட்டல் உரிமையாளர்களால் முழுமையாக கபலிகரம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை மீனவ கிராமங்கள் மெல்ல மெல்ல தங்களின் அடையாளத்தை இழந்து வருகிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 4-ம் தேதி கார்டில்லா என்ற சுற்றுலா நிறுவன சொகுசு கப்பல் புதுச்சேரியில் கொண்டுவரப்பட்டு கடலில் இருந்து சுற்றுலா பயணிகளை புதுச்சேரியில் இறக்கியும், புதிய பயணிகளை ஏற்றி இறக்கவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் கொண்டுவர சட்டமன்றத்தில் அறிவித்த போது அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்த்தன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் இதுபோன்ற சொகுசு கப்பலில் சட்டவிரோத செயல்கள் நடக்கும், சூதாட்டம் நடைபெறும், இதனால் நம் மாநில கலாச்சாரம் சீரழியும் என கடுமையாக எதிர்த்ததின் விளைவாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த சொகுசு கப்பல் பயணம் வருகிற 4-ம் தேதியில் இருந்து துவக்கப்பட உள்ளது.  வைசாக் சென்னை வழியாக புதுச்சேரிக்கு அந்த சொகுசு கப்பல் வந்தடையும். அந்த கப்பலில சுமார் 1400 பேர் பயணம் செய்வார்கள். அவர்கள் புதுச்சேரியில் இறங்கி ஒருநாள் தங்கி இளைப்பாருவார்கள். இந்த சொகுசு கப்பலின் மூலம் பயணிகள் இறக்குவதிலும், ஏற்றுவதிலும் மிகப்பெரிய பாதிப்பு மீனவர்ளுக்கு ஏற்படும். கடற்கரையில் இருந்து சுமார் 8 பாவு, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சொகுசு கப்பல் நிறுத்தப்படும். அங்கிருந்து பயணிகள் சிறிய படகுகள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டுவரப்படுவர். முகத்துவாரம் மவுத்து பகுதி வழியாக பயணிகளை ஏற்றி வரும் போது மீன்பிடி தொழில்கள் முழுமையாக பாதிக்கப்படும். மீனவர்களுடைய வலைகள் படகுகளால் சிக்கி சேதாரமடையும். விசிறு வலை தொழில் புரியும் உள்நாட்டு மீனவர்களும் சிறிய வலை மூலம் மீன்பிடி செய்பவர்களும் பாதிக்கப்படுவர்.

தற்போது புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கஞ்சா, கஞ்சா ஆயில், கொக்கையின், மெத்தடின், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நகரப்பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களில் இதுபோன்ற போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதும், அதை பயன்படுத்தி இரவு முழுவதும் ஆபாச நடனங்கள் ஆடுவதாக உள்ளது.

வைசாக்கில் இருந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த உல்லாச கப்பல் புதுச்சேரியை வந்தடையும் போது சுற்றுலா பயணிகளால் பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட சூழ்நிலை உருவாகும். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வம்பாகீரப்பாளையம் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். தற்போது உள்ள முகத்துவார கடற்கரை பகுதி சுற்றுலா சொகுசு கப்பல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.

ஒரு திட்டத்தை எதிர்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும், ஆளுங்கட்சியாக ஆன பின்பு அதே திட்டத்தை கொண்டு வருவது என்பது அரசு மீது மக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பினால் அப்போதைய துணைநிலை ஆளுநரும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் எதிர்த்தார். ஆனால் தற்போதைய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த நடைபெற்ற சட்டமன்றத்தில் ஏதாவது அறிவிக்கப்பட்டதா? அல்லது இத்திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதா? இதுபோன்று சமூக சமுதாய சீரழிவை ஏற்படுத்தக் கூடிய சொகுசு சீட்டாட்ட கப்பல் பயணத்திற்கு துணைநிலை ஆளுநர் எப்படி அனுமதி அளித்துள்ளார் என்று தெரியவில்லை.

மக்களுக்கு எதிரான இந்த சொகுசு கப்பல் பயண திட்டத்தை அதிமுக முழுமையாக எதிர்க்கும். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை அதிமுக முன்னெடுத்து செல்லும். இது சம்பந்தமாக கழக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுடைய கருத்தினை அறிந்து மீனவ மக்களோடு அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். எனவே ஆளும் இந்த அரசு சொகுசு சீட்டாட்ட கப்பல் புதுச்சேரி வருவதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும். இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The luxurious ship project of the Cardilla should be abandoned AIADMK insists again


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->