''டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தவில்லை என்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்''; செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
The High Court has ordered the Chengalpattu District Collector to appear in person if the TASMAC shop is not removed
செங்கல்பட்டு மாவட்டம் திம்மராஜகுளத்தை சேரந்த சி.கலையரசி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''திம்மராஜகுளம் சாலை மிகவும் குறுகலான சாலை. இந்த சாலைதான் அந்தப் பகுதி மக்களுக்கான பிரதான சாலை. இந்த சாலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் பொது மக்களுக்கு பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருபவர்களால் பெண்கள், குழந்தைகள் பயத்திலேயே வாழவேண்டியுள்ளது.
எனவே, இந்த கடையை அகற்ற கோரி கடந்த 2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2026 மார்ச் மாதங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்த டாஸ்மாக் கடையை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்.'' என்று மனுவில் குறிப்பிட்டள்ளார்.
இந்த மனு கடந்த ஜூன் மாதம் 04-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.ஜெய ராமராஜ் ஆஜரானார். அப்போது இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை, விதிகளுக்கு முரணாக குடியிருப்பு பகுதியில் இருந்தால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டும் கடை செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். கடை அகற்றப்பட்டது தொடர்பான நிலை அறிக்கையை ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும்.''என்று உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த வழக்கு மீண்டும் ஜூன் 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் கடை 03 மாதங்களில் காலி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த அறிக்கையை பார்த்த நீதிமன்றம், 03 மாதங்களில் கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு அக்டோபர் 05-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை தர அவகாசம் வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்,
இதை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் 14-ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The High Court has ordered the Chengalpattu District Collector to appear in person if the TASMAC shop is not removed