உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
The district collector reviewed the Stalin project works with you
கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமானது 15.07.2025 அன்று முதல் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன் ஒருபகுதியாக, தாந்தநாடு சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ள இந்த சிறப்பு முகாமினையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட்ட குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்கள் முகாமிற்கு வந்து விண்ணப்ப படிவங்களை வழங்கி செல்ல உள்ளே, வெளியே தனி வழி இருக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தெரிவித்து, காத்திருப்போருக்கான இருக்கை, பந்தல் ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பொதுமக்கள் முகாம் நடைபெறும் இடம் மற்றும் முகாமில் அளிக்கப்படும் அரசின் சேவைகள் தொடர்பாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும் எனவும், முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். துறை
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டு வரும் விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடைபெறும் நாளன்று தவறாமல் கொண்டு வருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, தனியாக அரங்கம் அமைக்கப்படும். எனவே, பொதுமக்கள் நடைபெறவுள்ள இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது. குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா கோத்தகிரி நகராட்சி ஆணையர் மோகன், கோத்தகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
English Summary
The district collector reviewed the Stalin project works with you