முதன் முதலில் 8 மணிநேர வேலையை பெற காரணமாக இருந்த தியாகிகள் தினம்!.
The day of martyrs which was the reason for the first time obtaining an 8-hour workday
புதுச்சேரி வரலாற்றில் ஜூலை 30 ஆம் தேதி மிக முக்கியமான நாள் தெற்கு ஆசியாவில் முதன் முதலில் 8 மணிநேர வேலை மற்றும் பல்வேறு தொழிலாளர் உரிமைகள் பெற காரணமான வீரம் செரிந்த தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் தியாக தினம்.
புதுச்சேரியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைவுக்குப் பின் தான் வீடு திரும்ப முடியும். அன்றாடம் 14மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது. அடிமட்டக் கூலி, கடுமையான அடக்கு முறைகள் இருந்தன.
இவ்வாறுஅடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் இலக்கான தொழிலாளர்கள் மத்தியில் இளைஞர் வ.சுப்பையா செயல்பட்டு வந்தார்.தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க தோழர் அமீர் ஹைதர் கான் புறப்பட்டார். அப்போது சென்னையில் தலைமறைவாக இருந்த தோழர் அமீர்ஹைதர் கானுக்குப் புதுச்சேரியில் கட்சியை உருவாக்க இளைஞர் சுப்பையாவின் அறிமுகம் கிடைத்தது. சுரண்டலுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல்படி தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக உள்ளிருப்புப் போராட்டம் துவங்கினார்கள். கடும்கோபம் கொண்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு இராணுவத்தால் ஆலையைச் சுற்றி வளைத்தது. ரோடு ரோலர் கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். பலர் கையில் கிடைத்ததைக் கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். அன்றைய துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை கால் உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரியில் பிரதான சாலை ரத்தம் தோய்ந்தது.
புதுச்சேரியில் ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் செய்தன. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவான கண்டனக்குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா ஜவகர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்ஸ் சென்றார். இந்தப் பின்னணியில் எட்டு மணி நேர வேலை உரிமை சட்டமாக்கப்பட்டது.
தொழிலாளர்கள் கையில் கிடைத்த உதிரி கருவிகள், கற்களை ஆயுதமாக ஏந்திக் கொண்டு, சுட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கியை நோக்கி, காவலர்களுக்கு எதிராக முன்னேறினார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் தமது இன்னுயிரை இழந்து தியாகிகளாகினர். உயிருக்கு அஞ்சாத தொழிலாளர்களின் எழுச்சி கண்டு, ராணுவமும் போலீசும் திரும்பி ஓடின! அவர்களை மேற்கு பொலிவார் வரை தொழிலாளர்கள் துரத்தி வந்தனர்.
ஒரு ஆயுதப்படை துப்பாக்கியோடு வருகிறது என்று அந்த தொழிலாளர்கள் அச்சம் அடையவில்லை. மாறாக ஓட ஓட விரட்டினார்கள். தமது தோழர்கள் 12 பேர், அநியாயமாகக் கண்முன்னே சுடப்பட்டு செத்து கிடந்ததை பார்த்து ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் சவானா ஆலைக்குத் தீ வைத்தார்கள். அந்தப் பன்னிரண்டு தியாகிகளின் பெயர்களை சொல்லாமல் நம்மால் கடந்து போக முடியாது.
1 அமலோர்ப்பநாதன்
2 ராஜமாணிக்கம்
3 கோவிந்தசாமி
4 ஜெயராமன்
5 சுப்பராயன்
6 சின்னையன்
7 பெருமாள்
8 வீராச்சாமி
9 மதுரை
10 ஏழுமலை
11 குப்புசாமி
12 ராஜகோபால்
இந்த தியாகிகளின் நினைவாக சவானா மில் (சுதேசி காட்டன் மில்) நுழைவுவாயில் இருந்த இடத்தில் ஏஐடியுசி நினைவு சின்னம் எழுப்பியிருக்கிறது. மூன்று தொழிலாளர்கள், பல்சக்கரம், தறிநாடா மற்றும் உதிரி பாகங்களைக் கையில் ஏந்தியபடி தீரத்தோடு ஆயுதப் படையை எதிர்த்து நிற்பது அங்கு எதிர்கொள்வதை அந்த சிலை காட்சிப்படுத்துகிறது.
English Summary
The day of martyrs which was the reason for the first time obtaining an 8-hour workday