நெல்லை, தென்காசியில் பயங்கரம்...! 10 பேர் மீது தொடர் தாக்குதல் நடத்திய 8 பேர் கூண்டோடு கைது...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய தாக்குதல், மிரட்டல் மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க காவலர்கள் முன்னெடுத்த தீவிர நடவடிக்கையில் 3 இளஞ்சிறார்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் எல்லைக்குட்பட்ட பிரம்மதேசம் பகுதியில் கடந்த 28-ஆம் தேதி, மணிகண்டன் (29) என்பவரை இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரது இடது கை விரலில் காயம் ஏற்படுத்திவிட்டு தப்பியோடியது.

அதன்பிறகு அதே கும்பல் வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வகணேசனை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல், தொழிற்கூடத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கு பணியாற்றிய ஒருவரின் செல்போனையும் பறித்துச் சென்றது.

மேலும் தப்பிச் செல்லும் வழியில் சாலையோரமாக நடந்து சென்ற ஒருவரையும் தாக்கி காயப்படுத்தியது.இதனைத் தொடர்ந்து மறுநாள் மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறில் அதே கும்பல் 6 பேரை சரமாரியாக தாக்கி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

அங்கிருந்து அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனங்களை கண்டித்ததால், திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டியில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் முபாரக் (30), அப்துல்ரஹுமான் (36) ஆகிய இருவரும் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.இந்த தொடர் சம்பவங்கள் தொடர்பாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம் மற்றும் மானூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தகவல் கிடைத்த உடனே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட காவலர்கள் உஷார்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டன.இரு மாவட்டங்களிலும் ஆயுதங்களுடன் கூடிய தீவிர வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், குற்றவாளிகளை கண்டறியும் நோக்கில் விரிவான தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன.

குற்றவாளிகள் பதுங்கக்கூடிய இடங்கள் அனைத்திலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, சம்பவங்களில் தொடர்புடைய 3 இளஞ்சிறார்கள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய வாகனத் தணிக்கைகள் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் பல்வேறு வழிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. டிரோன் கண்காணிப்பு, மோப்ப நாய் படை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் தேடுதல் மற்றும் விசாரணைப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்படும் ரவுடிகள் மற்றும் தொடர் குற்றவாளிகளுக்கு எதிராக விரிவான ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் மீது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror Nellai Tenkasi 8 people arrested cages serial attacks 10 people


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->