நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்! தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
Tamilnadu Weather Report Rain Alert 24 may 2025
தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாளையும் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அதன் செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழகம் மற்றும் தென்தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி மற்றும் பந்தலூரில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) கேரளாவில் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனுடன் தொடர்புடைய ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை அரபிக்கடலில் உருவாகி, ரத்னகிரிக்கு வடமேற்கே 30 கிமீ தொலைவில் நிலவி வருகிறது. இது இன்று நண்பகலில் ரத்னகிரி–டபோலி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 24 முதல் 30ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை (மே 25) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 35°C மற்றும் குறைந்தபட்சம் 26°C இருக்கும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu Weather Report Rain Alert 24 may 2025