புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை..தூக்கு தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?
Dashwanth was released from prison How did he escape the death penalty?
புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டது போலிஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
குன்றத்தூரைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், பின்னர் பிணத்தை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே உடலை தீவைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியேவந்தார். இந்தநிலையில் குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவரது தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தஷ்வந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.
அந்த தீர்ப்பில், “கோர்ட்டுகள் ஒவ்வொரு வழக்கையும் சட்டப்படி தீவிரமாக விசாரிக்க வேண்டும். அறக்கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்கக்கூடாது. வெகுஜன உணர்ச்சிகளாலும், புற நெருக்கடிகளாலும் கோர்ட்டுகள் ஆட்கொள்ளக்கூடாது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதை தொடர்ந்து, சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Dashwanth was released from prison How did he escape the death penalty?