தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டி: முதலிடம் பிடித்த தமிழக காவல் துறை..!
Tamil Nadu Police Department wins first place in national disaster rescue competition
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், தேசிய அளவில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் பிடித்துள்ளது.
தமிழக காவல் துறையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-ஆம் அணி தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாக செயல்படுகிறது. கடந்த 10 முதல் 12-ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை பிடித்தது.
அதாவது, ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட ஆபத்துகளின் போது, விரைந்து செயல்பட்டு பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்..? பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பதை நோக்கமாக வைத்து இந்த போட்டி நடத்தப்பட்டது.

முன்னதாக, தென்னிந்திய மண்டல அளவில் கடந்த மாதம் ஒடிசாவில் நடைபெற்ற போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 04 மாநில அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை முதல் இடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 04 மண்டலங்களிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 08 அணிகளுக்கு தேசிய அளவில் நவம்பர் 10 முதல் 12 வரை 03 நாட்கள் உத்திர பிரதேசத்தில் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில், இந்தியாவிலுள்ள 18 மாநில பேரிடர் மீட்பு படைகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொண்டன. அதில், முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 08 மாநில அணிகள் (தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா) தேசிய அளவிலான இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியில் தமிழ்நாடு காவல் துறையின் பேரிடர் மீட்பு படை முதலிடத்தையும், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் முறையே 02 மற்றும் 03-ஆம் இடத்தையும் பிடித்தன. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் பியூஸ் ஆனந்த் முன்னிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கோப்பை வழங்கினார். இதை தமிழக காவல் துறையின் செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் பெற்றுக் கொண்டார். இதற்கிடையில், வெற்றி பெற்ற தமிழக அணிக்கு டிஜிபி வெங்கடராமன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Police Department wins first place in national disaster rescue competition